Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player 

சைவ சித்தாந்தம்

இதுவரை காலமும் மற்றவர்களின் ஆக்கங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொண்ட நான் இன்றுமுதல் எனது அனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைகின்றேன்.
அன்பின்
நாகேந்திரம் கருணாநிதி

சைவ சித்தாந்தம் ( பகுதி – 12 )
(நாகேந்திரம் கருணாநிதி)
7. ஆலய  விக்கிரகங்களின் தத்துவம்

4. விநாயகர். இறைவன் (சிவம்) ஓசை வடிவமாக, பிரணவ வடிவமாக, “ஓம்” வடிவமாக  வந்தபோது விநாயகர் என அழைக்கப்படுகின்றார். அவர் 1.கணபதி (பூதகணங்களுக்கெல்லாம் அதிபதி), 2.ஆனைமுகன் 3.கஜமுகன் (ஆனை முகத்தை உடையவர்), 4.விக்கினேஸ்வரன் (விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன்) 5.பிள்ளையார் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.
பிள்ளையார் ஞானவடிவானவர். ஆன்மாக்களுக்கு ஞானத்தை அருளுபவர் அவரின்  
முகத்தோற்றம் – “ஓ” ஓம் என்னும் பிரணவ மந்திரத்தைக் காட்டுகிறது.
திருவடி – ஞானம் இதுவே ஆன்மாவைப் பொருந்தி நின்று மலங்களைத் தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது.
பெருவயிறு – எல்லா உலகங்களும், உயிர்களும் இதற்குள் அடக்கம் எனக் குறிக்கிறது.
கொம்புகள் – மகாபாரதத்தை எழுதுவதற்காக கொம்பை உடைத்து வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது.
பெரிய செவிகள் – எல்லாவற்றையும் கேட்டு நல்லனவற்றை மட்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை உணர்த்துகிறது.
ஐந்துகரங்கள் – 1. பாசத்தை ஏந்திய கரம் படைத்தலையும், 2. தந்தம் ஏந்திய கரம் காத்தலையும், 3. அங்குசம் ஏந்திய கரம் அழித்தலையும், 4. மோதகம் ஏந்திய கரம் அருளலையும் 5. துதிக்கை அனுக்கிரகம் செய்வதையும் குறிக்கின்றன. இதன்மூலம் சிவம் செயல்படுத்துவது போல பிள்ளையாரும் பிரபஞ்ச இயக்கத்தை செய்வதாகக் கருதி பிள்ளையாரும் சிவமும் ஒன்று என்னும் தத்துவத்தை வலியுறுத்துகிறது. இத்தத்துவத்தின் அடிப்படையில்  கணபதியை முழுமுதற் கடவுளாகக் கொண்டு காணாபத்தியம் என்னும் சமயம் உருவாகியது. பிற்காலத்தில் இச்சமயம் சைவசமயத்துடனும், வைஷ்ணவ சமயத்துடனும் ஐக்கியமாகிவிட்டது. புராணங்களில் பிள்ளையார் சிவன், பார்வதிதேவியின் மூத்த பிள்ளையாகவும், முருகனின் அண்ணனாகவும்  கூறப்பட்டுள்ளது. மூஷிகம் இவரின் வாகனமாகக் கொள்ளப்படுகின்றது. கணேசபுராணம் இவரின் சரித்திரத்தைக் விரிவாகக் கூறுகிறது. விநாயகர் வழிபாடு சைவ சமயத்தில் மட்டுமல்லாமல் வைஷ்ணவம், பௌத்தம், சமண மதங்களிலும் உள்ளது.
“உ” என்னும் உகரம் பிள்ளையார் சுழியாக எழுதப்படுகின்றது. சைவசமயத்தவர்கள் எந்தவொரு விடையத்தையும் எழுதத்தொடங்கும் போதும் பிள்ளையார் சுழி போட்டே தொடங்குவது மரபாக இருந்தது. இவ்வாறே எந்த ஒரு காரியத்தைத் தொடங்கும் போதும் மஞ்சள், குங்குமம், சந்தணம், வெல்லம், பசுவின் சாணம்,
புற்றுமண் போன்றவற்றால் பிள்ளையாரைப் பிடித்து வைத்து அவரை வணங்கியே அக்காரியம் தொடங்கப்படுகின்றது.
பிள்ளையார் பின்வரும் பல மூர்த்தங்களில் காட்சியளிக்கின்றார். 1.நர்த்தன கணபதி, 2.நடன கணபதி, 3.நரமுக கணபதி, 4.சித்தி புத்தி கணபதி, 5.வாதாபி கணபதி ஆகியவற்றுடன் மேலும் 32 மூர்த்தங்கள் உள்ளன, அவையாவன 1.உச்சிட்ட கணபதி, 2.உத்தண்ட கணபதி, 3.ஊர்த்துவ கணபதி, 4.ஏகதந்த கணபதி, 5.ஏகாட்சர கணபதி, 6.ஏரம்ப, கணபதி 7.சக்தி கணபதி, 8.சங்கடஹர கணபதி, 9.சிங்க கணபதி, 10.சித்தி கணபதி, 11.சிருஸ்டி கணபதி, 12.தருண கணபதி, 13.திரயாஷர கணபதி, 14.துண்டி கணபதி, 15.துர்க்கா கணபதி, 16.துவிமுக கணபதி, 17.துவிஜ கணபதி, 18.நிருத்த கணபதி, 19.பத்தி கணபதி, 20.பால கணபதி, 21.மஹா கணபதி, 22.மும்முக கணபதி, 23.யோக கணபதி, 24.ரணமோசன கணபதி, 25.லட்சுமி கணபதி, 26.வர கணபதி, 27.விக்ன கணபதி, 28.விஜய கணபதி, 29.வீர கணபதி, 30.ஹரித்திரா கணபதி, 31.க்ஷிப்ர கணபதி, 32.க்ஷிப்ரபிரசாத கணபதி.
ஆலயங்களுக்கு நாம் செல்லும் போது முதலில் பிள்ளையாரை வணங்கிய பின்பே மூலவரையும் , மற்ற பரிவார மூர்த்தங்களையும் வணங்கவேண்டும் .
பிள்ளையாரை வணங்கி ஒரு செயலைத் தொடங்கினால் அச்செயல் வெற்றியில் முடியும் என்பது ஐதீகம். பின்வரும் பாடல்கள் போலப் பெரும்பாலான சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் காப்புச் செய்யுள் அல்லது கடவுள் வாழ்த்துக்கள் அமைந்துள்ளன.
திருமந்திரம் காப்புச் செய்யுளில்
“ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்றுகின்றேனே”                  
சிவஞானசித்தியார் காப்புச் செய்யுள் பரபக்கம் பாடல் இல. 1 இல்
“ஒரு கோட்டன் இரு செவியன் மும்மதத்தன்
நால்வாய் ஐங்கரத்தன் ஆறு
தரு கோட்டம் பிறைஇதழித் தாழ்சடையான்
தரும் ஒரு வாரணத்தின் தாள்கள்
உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதே
இரவுபகல் உணரவோர் சிந்தைத்
திருகு ஓட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன்
றோஎன்னச் செய்யும் தேவே.”                          
திருவருட்பயன் காப்புச் செய்யுளில்
“நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்
கற்குஞ் சரக்கன்று காண்.”                                  
சிவப்பிரகாசம் பாடல் எண் 3 இல்
“நலந்தரநூல் இருந்தமிழின் செய்யுட் குற்றம்
நண்ணாமை இடையூறு நலியாமை கருதி
இலங்குமிரு குழையருகு பொருதுவரி சிதறி
இணைவேல்கள் இகழ்ந்தகயல் கண்ணியொடும் இறைவன்
கலந்தருள வரும்ஆனை முகத்தான் மும்மைக்
கடமருவி எனநிலவு கணபதியின் அருளால்
அலந்துமது கரமுனிவர் பரவவளர் கமலம்
அனையதிரு அடியிணைகள் நினைதல் செய்வாம்.”     
திருவிளையாடற் புராணம் காப்புச் செய்யுளில்
“சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பர
முத்தி யான முதலைத் துதிசெயச்
சுத்தி யாகிய சொற்பொரு ணல்குவ
சித்தி யானைதன் செய்யபொற் பாதமே.” 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் நல்வழியில் கடவுள் வாழ்த்தில் “பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் – கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.”

தொடரும்...

___________________________________________________________________________

சைவ சித்தாந்தம் ( பகுதி – 11 )
(நாகேந்திரம் கருணாநிதி)
7.  ஆலய  விக்கிரகங்களின் தத்துவம் <

3. பராசக்தி.  இறைவன் (சிவம்) ஆன்மாக்களின் மேல் கொண்ட கருணையினால் ஆன்மாக்களை ஈடேற்றும் பொருட்டு தான் செயல்ப்படுவதற்காகச் சக்தியாகத் திருமேனி கொள்கிறான். இதை திருக்களிற்றுப் படியார் பாடல் எண் 1 இல்
“அம்மையப்ப ரேஉலகுக்கு அம்மையப்பர் என்றறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் – அம்மையப்பர்
எல்லா உலகிற்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்”           எனக் கூறியுள்ளார்.
இக்கூற்றுக்கு வலுச்சேர்ப்பதுபோல இந்தியாவில் பின் வரும் இடங்களில் லிங்க வடிவில் பராசக்தி காணப்படுகிறாள். 1.தமிழகத்தில் மயிலாடுதுறையில் அனவித்யா எனவும், 2.படவேட்டில் ரேணுகாபரமேஸ்வரியாகவும், 3.கொங்குநாட்டில் பன்னாரிஅம்மனாகவும், 4.கர்நாடகத்தில் மிக முக்கிய சக்தி பீடமாகத் திகழும் (அர்த்தநாரி பீடம்) கொல்லூரில் மூகாம்பிகை எனவும், 5.மங்களூரில் கடில்துர்க்காபரமேஸ்வரி எனவும், 6.உத்தரப்பரதேசத்தில் நைமிசாரண்யத்தில் லிங்க தாரணி எனவும் நிலைபெற்றுள்ளாள்.
இறைவன் (சிவம்) தான் கொண்ட திருமேனியாகிய பராசக்திக்கூடாக முத்தொழிலையும் புரிவதற்காக பிரம்மா, விஷ்ணு, உருத்திரனாக திருமேனி கொள்கிறான். இதைத் திருமந்திரம் பாடல் எண் 401 இல்
“அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்
அளியார் திரிபுரை யாம் அவள் தானே
அளியார் சதாசிவ மாகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே.”    எனவும்
திருமந்திரம் பாடல் எண் 402 இல்
“வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரண காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி யானவம் மோகினி
பூரணி போதாதி போதமு மாமே.”         எனவும் கூறப்பட்டுள்ளது.
பராசக்தி உருவ வழிபாட்டில் மட்டும் அல்லாமல் அருவுருவமாகவும் வழிபடப்படுகின்றாள். அதாவது யந்திர வழிபாடும், ஸ்ரீசக்கர வழிபாடும் ஆகும். இதை மேற்கூறிய முதல் பாடல் விளக்குகிறது.
இருக்கு வேதம் தேவீ சூக்தம் தேவீ, தானே எல்லாமாய் இருந்து உலகைப் படைத்து, காத்து, அழித்து, மறைத்து அருள் புரிவதை தெளிவாகவும் விளக்கமாகவும் கூறுகிறது. அதர்வண வேதம் பராசக்தியின் ஆற்றலை விளக்கிக் கூறுகிறது. யஜுர் வேதம் பராசக்தியின் பல வடிவங்களை வர்ணிக்கின்றது.
பராசக்தி மூலமே இவ் உலக இயக்கம் எல்லாம் நடைபெறுவதால் சக்தியை முழுமுதற் கடவுளாகக் கொண்டு சாக்தம் என்னும் சமயம் தோன்றியது. பிற்காலத்தில் இச்சமயத்தைப் பின்பற்றும் பலர்  சைவசமயத்துடன் ஐக்கியமாகிவிட்டனர்.
பராசக்தி சிவத்துடன் சக்தியாகவும், நாதத்துடன் விந்தாகவும், சதாசிவனுடன் மனோன்மணியாகவும், மகேசனுடன் மகேசையாகவும், உருத்திரனுடன் உமையாகவும், திருமாலுடன் திருமகளாகவும், அயனுடன் கலைமகளாகவும் தோற்றமளிக்கிறாள்,
இவ்வுண்மையை சிவஞானசித்தியார் சுப்பக்கம் பாடல் எண் 165 இல்
“சத்தியாய் விந்து சத்தியாய் மனோன்மணி தானாகி
ஒத்துறும் மகேசை ஆகி உமை திரு வாணி ஆகி
வைத்துறும் சிவாதிக்கு இங்ஙனம் வரும் சத்தி ஒருத்தியாகும்
எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்.”       எனக் கூறப்பட்டுள்ளது
இதை பின் வரும் திருமந்திரம் பாடல் எண் 402 இலும் வலியுறுத்தப்படுகின்றது.
“வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரண காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி யானவம் மோகினி
பூரணி போதாதி போதமு மாமே.”        
மேலும் பராசக்தி 51 சக்தி பீடத்திலும் வெவ்வேறு பெயர்கள் மூலம் அழைக்கப்படுகிறாள். சிதம்பரத்தில் சிவகாமி, திருவேற்காட்டில் கருமாரி,  சமயபுரத்தில் மாரிஅம்மன் எனவும், பரமேஸ்வரனுடன் பார்வதி ஆகவும், தட்சாயினி, புவனேஸ்வரி, பரமேஸ்வரி எனவும் அவளின் நாமங்கள் தொடர்கின்றன.,
பராசக்தியின் 51 சக்திபீடங்கள் இந்தியாவில் தமிழ்நாடு  1.காஞ்சிபுரம் (காமகோடி பீடம்) காமாக்ஷி, 2.மதுரை (மந்த்ரிணீ பீடம், மனோன்மணி பீடம்) மீனாக்ஷி (மந்த்ரிணீ, இராஜமாதங்கி) 3.திருஆனைக்கா (தண்டினீ பீடம், ஞானபீடம்) அகிலாண்டேஸ்வரி (மஹாவாராகி, ஸ்ரீதேவி, தண்டநாதா) 4.ராமேஸ்வரம் (ஸேது பீடம்) பர்வதவர்த்தினி, 5.பாபநாசம் (விமலா பீடம்) விமலை (உலகநாயகி), 6.திருவாரூர் (கமலை பீடம்) கமலாம்பாள், 7.கன்யாகுமரி (குமாரி பீடம்) குமாரி, 8.திருவையாறு (தர்ம பீடம்) தர்மஸம்வர்த்தினி, 9.திருவண்ணாமலை (அருண பீடம்) அபீதகுசாம்பாள், 10.திருக்கடவூர் (கால பீடம்) (அஸ்டவீரட்டானம்) அபிராமி, 11.திருக்குற்றாலம் (பராசக்தி பீடம், யோகபீடம்) பராசக்தி, 12.கும்பகோணம் (மந்திர சக்தி பீடம்) ஸ்ரீமங்களாம்பிகை, 13.தேவிப்பட்டினம் (வீரசக்தி பீடம்) மகிஷமர்த்தினி, 14.திருவெண்காடு (ப்ரணவ பீடம்) ப்ருஹ்ம வித்யா, 15.திருநெல்வேலி (காந்தி பீடம்) காந்திமதி, 16.திருவொற்றியூர் (இக்ஷ பீடம்) திரிபுரசுந்தரி, 17.திருவாலங்காடு (காளி பீடம்) மகாகாளி, 18.ஈங்கோய்மலை(திருச்சி) (சாயா பீடம்) ல்லிதா கேரளா 19.நந்திபுரம் (கல்யாணி பீடம், பகவதி பீடம்) நந்தினி (ஹேமாம்பிகை) கர்நாடகா 20.கொல்லூர் (அர்த்தநாரி பீடம்) மூகாம்பிகை, 21.மைசூர் (சம்ப்ரதாய பீடம்) சாமுண்டி, 22.கோகர்ணம் (கர்ண பீடம்) பத்ரகர்ணி, ஆந்திரா 23.காளகஸ்த்தி (ஞான பீடம்) ஞானப்ரஸுந்தாம்பிகை, 24.த்ராக்ஷாராமா (மாணிக்க பீடம்) மாணிக்காம்பாள், 25.ஸ்ரீசைலம் (ஸ்ரீசைல பீடம்) பிரமராம்பாள், மகராஷ்டிரம் (மும்பை) 26. கோலாப்பூர்  (கரவீர பீடம்) மஹாலஷ்மி, 27.த்ரியம்பகம் (திரிகோண பீடம்) த்ரியம்பகதேவி, 28.துள்ஜாபுரம் (உத்பலா பீடம்) பவானி, ஒரிசா 29. பூரி (பைரவி பீடம்) பைரவி, குஜராத் 30.ஸோமநாதம் (ப்ரபாஸர பீடம்) சந்திரபாகா, 31.அம்பாஜி (பிருந்தாவனம்) (துவாரகை) (முத்தி பீடம்) குமாரி (பத்ரகாளி), ம.பி. 32.மஹாகாளம் (மஹோத்பலா பீடம்) சங்கரி, 33.உஜ்ஜயனி (ருத்ராணி பீடம்) மஹாகாளி, ராஜஸ்தான் 34.புஷ்கரம் (காயத்ரீ பீடம்) காயத்ரி, உ.பி. 35.காசி (மணிகர்ணிகா பீடம்) விசாலாஷி, 36.வைதரணி (விரஜா பீடம்) விரஜை, மே.வ. 37.கல்கத்தா (உக்ரசக்தி பீடம்) காளி, பீகார் 38.கயா (திரிவேணி பீடம்) மந்திரிணி, பஞ்சாப் 39.ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) திரிபுரமாலினி, ஹரியானா 40.ஹஸ்திணாபுரம் (ஜெயந்தி பீடம்) முக்திநாயகி, 41.குருக்ஷேத்ரம் (உபதேச பீடம்) ஸ்தாணுப்பிரியை, இ.பி. 42.நாகுலம் (தேவிகா தடம்) (உட்டியாண பீடம்) நகுலேஸ்வரி, 43.ருத்ரகோடி (கேதாரம்) (ருத்ரசக்தி பீடம்) மார்க்கதாயினி (கௌரி), 44.நீலபர்வதம் (சிம்லா) (ச்யாமளா பீடம்) நீலாம்பிகை, 45.ப்ரயாகை (ப்ரயாகை பீடம்) லலிதா, அஸ்ஸாம் 46.காமரூபம் (காமகிரி பீடம்) காமரூபிணி, மிர்ஜாப்பூர் 47.விந்தியாசலம் (விந்தியாசல  பீடம்) நந்தாதேவி, காஷ்மீர் 48.ஸ்ரீநகர் (ஜ்வாலாமுகி பீடம்) ஜம்புநாதேஸ்வரி, 49.அம்பத்தூர் (வைஷ்ணவி பீடம்) வைஷ்ணவி, நேபாளம் 50.பசுபதி – காட்மாண்ட் (சக்தி பீடம்) பவானி, திபெத் 51.மானஸரொவர் (த்யாக பீடம்) தாக்ஷாயனி.
சக்தி பீடங்கள் 51 உடன் வேறு சிலவும் சேர்ந்து 64 ஆகவும் அத்துடன் இன்னும் சில சேர்ந்து 108 உம் கூட உள்ளது எனவும் கூறுவர்.
தொடரும்.......

___________________________________________________________________________

சைவ சித்தாந்தம் ( பகுதி – 10 )
(நாகேந்திரம் கருணாநிதி)
“மருத்துவம் பிழைத்தால் வாகடத்தைப் பார்


சாத்திரம் பிழைத்தால் கிரகணத்தைப் பார்”
மேற்கூறிய முதியோர் வாக்கு வேதங்களில் கூறப்பட்டுள்ள ஆத்ம வாக்கியம் போன்றது. எமது முன்னோர் சமயக் கோட்பாடுகளுக்கூடாக வாழ்க்கை நெறியை மட்டுமல்ல நாளாந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது என்ற வழிமுறைகளையும் கூறிவைத்துள்ளார்கள். லண்டனில் ஏற்பட்டுள்ள 1.லண்டன் நேரத்திற்குக் கணித்த கலண்டரைப் பாவிப்பதா ? அல்லது இலங்கை இந்தியாவில் கணித்த கலண்டரைப் பாவிப்பதா ? 2.வாக்கிய பஞ்சாங்கத்தைப் பாவிப்பதா ? அல்லது திருக்கணித பஞ்சாங்கத்தைப் பாவிப்பதா ? என்ற கேள்விகளுக்கு விடைகாணும் வழியை  மேற்படி முதியோர் வாக்கு கூறியுள்ளது.
இன்று லண்டனில் சூரியகிரகணம் நடந்தபடியால் இவ்விடையம் சம்பந்தமாக அண்மையில் (28-1-15) சைவசித்தாந்தம் பாகம் - 2 இலும், (04-03-15) பாகம் – 7 இலும் நான் எழுதியதற்கு அமைவாக மேற்படி கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது.
1. இன்று லண்டனில் காலை 9.30 இற்கு முழுமையான சூரியகிரகணம் நடைபெற்றதை நாம் காணக்கூடியதாக இருந்தது.
2. லண்டன் நேரத்திற்குக் கணிக்கப்பட்டதாக எழுதியுள்ள மெய்கண்டான் கலண்டரில் இன்று சூரியகிரகணம் நடக்கப் போவதாகக் கூறப்படவில்லை.
3. லண்டன் நேரத்திற்குக் கணிக்கப்பட்டதாக எழுதியுள்ள லீலாபஞ்சாங்கக் கலண்டரில் இன்று சூரியகிரகணம் நடக்கப் போவதாகக் கூறப்படவில்லை.
4. லண்டன் நேரத்திற்குக் கணிக்கப்பட்டதாக எழுதியுள்ள தமிழ்த்தாய் நாட்காட்டியில்  இன்று சூரியகிரகணம் நடக்கப் போவதாகக் கூறப்படவில்லை.
5. வாக்கிய பஞ்சாங்க முறைப்படி லண்டன் நேரத்திற்குக் கணித்த ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தால் வெளியிடப்பட்ட கலண்டரில் இன்று சூரியகிரகணம் நடக்கப் போவதாகக் கூறப்படவில்லை.
6. ஒரு வியாபார ஸ்தாபனத்தால் இலவசமாகக் கொடுக்கப்பட்ட மாதக் கலண்டரிலும் இன்று சூரியகிரகணம் நடக்கப் போவதாகக் கூறப்படவில்லை.
7. திருக்கணித பஞ்சாங்க முறைப்படி லண்டன் நேரத்திற்குக் கணித்த ஸ்ரீ சிவசக்தி திருக்கணித கலண்டரில் “ - - -  மத்யம் மு.ப. 09.31 - - - “ இல் சூரியகிரகணம் நடைபெற இருப்பதாகப் போடப்பட்டுள்ளது.
1.லண்டனில் சூரியகிரகணம் தோன்றியபோது இலங்கை, இந்தியாவில் கிரகணம் தோன்றாத படியால்  இலங்கை, இந்தியாவில் கணித்த கலண்டரை லண்டனில்  பாவிக்கமுடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியக்கலண்டரைப் பின்பற்றும் ஈஸ்ற்காம் முருகன் ஆலயமும், லஷ்சுமி நாராயணன் (மகாலஷ்சுமி கோவில்) ஆலயமும் இன்று கிரகணத்தின் போது பூட்டப்பட்டிருந்தன. ஆகவே இவ்விடையத்தில்  இந்தியாவில் கணித்த கலண்டரை இவ் ஆலயங்கள் பின்பற்றவில்லை எனத்தெரிகிறது.

7. இவற்றிலிருந்து பார்க்கும் போது திருக்கணித பஞ்சாங்க முறைப்படி லண்டன் நேரத்திற்குக் கணித்த ஸ்ரீ சிவசக்தி திருக்கணித கலண்டர் தான் லண்டனுக்குப் பொருத்தமானது என்னும் முடிவுக்கு வரவேண்டியுள்ளது..
8. எனவே நான் கலண்டர் பற்றி எழுதிய முன் கட்டுரையில் கூறிய “.இங்கு இருக்கும் எல்லாச் சைவ சமயத்தவர்களும் எமது சமய விழாக்கள், கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும் ஒரே நாளில் நடத்தச் சம்பந்தப்பட்ட எல்லோரும் முக்கியமாக ஆலயங்களின் நிர்வாகிகள், குருமார்கள், கலண்டர்களை இறக்குமதி செய்யும், விற்கும் வர்த்தகர்கள் ஆகியோர் முயற்சித்து, வரும் காலச் சந்ததியினர்  நம்பிக்கையுடன் எமது சைவசமயக் கொள்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் எவ்வித ஐயப்பாடுமின்றிக்  கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை வகுப்பது  சம்பந்தப்பட்ட எல்லோரினதும் கடமையாகும்.” என்ற கூற்றைத் திரும்பவும் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

20 – 03 - 2015

___________________________________________________________________________

சைவ சித்தாந்தம் ( பகுதி 9 ) 
(நாகேந்திரம் கருணாநிதி)
7. ஆலய  விக்கிரகங்களின் தத்துவம்


2. நடராஜர்
இறைவன் “சிவாயநம“ என்கின்ற திருவைந்தெழுத்துக்களையே தனது திருமேனியாகக் கொண்டு உயிர்களின் பிறவித்துயர் நீங்குவதற்காக நடனம் புரியும் தோற்றமே நடராஜர் தோற்றமாகும். தூல ஐந்தெழுத்தில் (நமசிவாய) ந – திருவடி, ம – திருவயிறு, சி – திருத்தோள், வ – திருமுகம், ய – திருமுடி. சூக்கும ஐந்தெழுத்தில் (சிவாயநம) சி – உடுக்கை எந்திய திருக்கரம் படைத்தலையும், வா – வீசிய இடது திருக்கரம் அருளலையும், ய – வலது அபய கரம் காத்தலையும், ந – நெருப்பை ஏந்திய இடது திருக்கரம் அழித்தலையும், ம – முயலகனைக் கீழே அழுத்தும் திருவடி மறைத்தலையும், திருவாசி “ஓம்” என்னும் பிரணவத்தையும், அதில் உள்ள ஒளிச்சுடர்கள் “ஓம்” என்ற நாதப்பிரம்மத்தின் விரிவான 51 எழுத்துக்களையும் குறிக்கும். இவற்றை
“உண்மை விளக்கம்” பாடல் எண் 31 இல்
“எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக்கேள் – சிட்டன்
சிவாயநம என்னும் திருவெழுத்தஞ் சாலே
அபாயமற நின்றாடு வான்.”                 எனவும்
“உண்மை விளக்கம்” பாடல் எண் 32 இல்
“ஆடும் படிகேள்நல் லம்பலத்தான் ஐயனே
நாடும் திருவடியி லேநகரம் – கூடும்
மகரம் உகரம் வளர்தோள் சிகரம்
பகருமுகம் வாமுடியப் பார்.”               எனவும்  
“உண்மை விளக்கம்” பாடல் எண் 33 இல்
“சேர்க்கும் துடிசிகரம் சிற்கனவா வீசுகரம்
ஆர்க்கும் யகரம் அபயகரம் – பார்க்கிலிறைக்கு
அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்
தங்கும் மகரமது தான்.”                     எனவும்
“உண்மை விளக்கம்” பாடல் எண் 34 இல்
“ஓங்கார மேநல் திருவாசி உற்றதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம் – ஆங்காரம்
அற்றார் அறிவர்அணி யம்பலத்தான் ஆடலிது
பெற்றார் பிறப்பற்றார் பின்.”                  எனவும்   கூறப்பட்டுள்ளது.

நடராஜரின் நடனத் தோற்றங்கள் நான்குவித ஆன்மாக்களுக்காக நடாத்தப்படும் நடனத் தோற்றங்களைக் குறிக்கின்றன.
1. ஊனநடனம் (மோக காமிகளுக்காக நிகழ்த்தப் பெறுவது) இதில் படைத்தல் உடுக்கை ஏந்திய திருக்கரம், காத்தல் அமைந்த திருக்கரம், அழித்தல் அக்கினி ஏந்திய திருக்கரம், மறைத்தல் அழுத்தமாக ஊன்றிய திருவடி, அருளல் தூக்கிய திருவடி ஆகியவற்றால் குறிக்கப்படுகின்றன.
2.ஞானநடனம் (முத்தி காமிகளுக்காக நிகழ்த்தப் பெறுவது) இதில் உடுக்கை ஏந்திய திருக்கரம் மாயாமலத்தை நீக்குவதற்கும், அக்கினி ஏந்திய திருக்கரம் கன்ம மலத்தைச் சுடுவதற்கும், ஊன்றிய திருவடி ஆணவமலத்தை அடக்குவதற்கும், தூக்கிய திருவடி பேரின்பம் அருளுவதற்கும், அமைந்த திருக்கரம் பேரின்பத்தில் ஆன்மாவை அழுத்தம் செய்வதற்கும் பயன்படுகின்றன,
3.ஆனந்தநடனம் (மும்மலம் நீக்கி வீடு பேறு அளிக்கும்) இதில் டமருகம் ஏந்திய திருக்கரம் துடியை அசைத்தல் பக்குவம் எய்திய ஆன்மாவின் உணர்விலிருந்து மாயையை உதறி விலக்குவதையும், ஓம அங்கி எனப்படும் அக்கினியை ஏந்திய திருக்கரம் ஆன்மாவின் தொல் வினைகளாகிய கன்மவினைகள் முளையாதவாறு சுடுவதையும், ஊன்றிய திருவடி ஆணவம் மேலிடாமல் அதன் இரு ஆற்றல்களான ஆவாரக சக்தியையும் (ஆணவம் ஆன்மாவை மறைக்கும் செயலையும்) அதோநியாமிகா சக்தியையும் (கீழ் வீழ்த்தும் செயலையும்) கெடுத்து ஆணவ ஒடுக்கம் ஏற்படச் செய்வதையும், தூக்கிய திருவடி சகல, கேவல நிலைகளில் சுழன்று வந்த உயிரை அதிலிருந்து விடுவித்து அதில் மீளாதபடி துரிய அருள் நிலைக்கண் தூக்கி நிறுத்தி உய்விப்பதையும், அவ்வெடுத்த திருவடியின் குஞ்சித (வளைந்த) நிலையும் அதற்கொப்ப அப்பாதத்தைக் காட்டும்  திருக்கையும், நில் என்னும் பாணியிலும் உடனாக அருகிருக்கிறேன் என்ற பாணியிலும் அமைந்த அபய கரமும், துரியாதீதம் என்னும் ஆனந்த நிலையில் ஆன்மாவை அழுத்தும் குறிப்பாக அமைந்து பெருங்கருணைப் பெருக்கால் அபயகரத்தால் பேரானந்தக் கடலில் ஆன்மா மூழ்கடிக்கப்படுவதையும் பாவனை செய்கிறது.
4.பெருநடனம் (சீவன் முத்தருக்காக நிகழ்த்தப் பெறுவது) பிறப்பறுப்பதற்காக நிகழ்த்தப்பெறுவது.
திருநடனக் காட்சி பற்றிய சில அருளாளர்களின் கூற்றைப் பார்ப்போமானால் சேக்கிழார் பெருமான்
“கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியேயாமம் ஆகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி.”
அப்பர் பெருமான்
“குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்தசடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.”
மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் இடையில்
..நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே ...
திருமூலர் பெருமான் திருமந்திரம் பாடல் எண் 77 இல்
“மாலாங்கனே இங்கு யான் வந்த காரணம்
நீலாங்க மேனியன் நேரிழையாள் ஒடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே.”
மேலும் சடாமுடி ஞானத்தின் அடையாளமாகவும், பிறை பேரறிவையும், கங்கை அளவில்லாத ஆற்றலையும், ஊமத்த மலர் விருப்பு வெறுப்பற்ற தன்மையையும், திருநீலகண்டம் அருளாற்றலையும், முக்கண் சூரியன், சந்திரன், தீயையும், பூநூல் காயத்திரியையும், திருநீறு பராசக்தியையும் குறிக்கும் இத்தத்துவங்களை அறிந்து நாம் இறைவனை வழிபடவேண்டும்.                                                                 தொடரும்.........

___________________________________________________________________________

சைவ சித்தாந்தம் ( பகுதி 8 )
(நாகேந்திரம் கருணாநிதி)
7. ஆலய  விக்கிரகங்களின் தத்துவம்


1. சிவலிங்கம்
லிங்கம் அடையாளம் எனப் பொருள்படும். லிங்கம் என்பது சித்தரித்தல் எனவும் பொருள்படும், ஐந்தொழிலும் இதில் அடங்கியதால் லிங்கம் எனப்பட்டது எனவும் கூறுவர்.
எந்த இடத்தில் பிரளயகாலத்தில் பிரபஞ்சம் அனைத்தும் லயம் அடைந்து படைப்புக் காலத்தில் எதிலிருந்து மீண்டும் உற்பத்தியாகின்றனவோ அதுவே லிங்கம் எனப்படும்.
இறைவன் (சிவம்) ஆன்மாவின் மேல் உள்ள கருணையினால் ஆன்மாவை ஈடேற்றும் பொருட்டு எடுக்கும் வடிவங்களில் ஒன்று சிவலிங்கமாகும்.
திருமந்திரம் ஆறு வகை லிங்கம் பற்றிப் பின்வரும் பாடல்கள் மூலம் கூறுகிறது.
1. அண்டலிங்கம் பாடல் எண் 1712
“இலிங்கம் அதுஆவது யாரும் அறியார்
இலிங்கம் அதுஆவது எண்திசை எல்லாம்
இலிங்கம் அதுஆவது எண்ணென் கலையும்
இலிங்கம் அதுஆக எடுத்தது உலகே.”
2. பிண்டலிங்கம் பாடல் எண் 1726
“மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே.”
3. சதாசிவலிங்கம் பாடல் எண் 1730
“கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கை இரண்டெட்டும் பரந்தெழும்
தேடும் முகம்ஐந்து செங்கண்ணின் மூவைந்து
நாடும் சதாசிவ நல்ஒளி முத்தே.”
4. ஆத்துமலிங்கம் பாடல் எண் 1753
““அ”கார முதலாய் அனைத்துமாய் நிற்கும்
“உ”கார முதலாய் உயிர்பெய்து நிற்கும்
“அ”கார “உ”காரம் இரண்டும் அறியில்
“அ”கார “உ”காரம் இலிங்கம் அதாமே.”
5. ஞானலிங்கம் பாடல் எண் 1763
“உருவும் அருவும் உருவோடு அருவும்
மருவு பரசிவன் மன் பல்உயிர்க்கும்
குருவும் எனநிற்கும் கொள்கையன் ஆகும்
தருஎன நல்கும் சதாசிவன்தானே.”
6. சிவலிங்கம் பாடல் எண் 1773
“குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறுஇவை நீண்டு அகன்றானை
வரைத்து வலம் செய்யுமாறு அறியேனே.”
1.அவ்வியத்தலிங்கம் (நிட்களலிங்கம்) (பரநாதம்) (பரவிந்து), 2.வியத்தாவியத்தலிங்கம் (சிவலிங்கம்) (சதாசிவ வடிவம்) (அருஉருவத்திருமேனி) 3.வியத்தலிங்கம் (25 மகேசுவரவடிவங்கள்) என மூவகைப்படும் எனவும் கூறுவர்.. சிவலிங்கம் தூலலிங்கம், பத்திரலிங்கம், சூட்சுமலிங்கம் என மூவகைப்படும் எனச் சிவாகமங்கள் கூறுகின்றன. கருவறையிலே மூலஸ்தானத்தில் இருப்பது தூலலிங்கமாகும். சேக்கிழார் சுவாமிகள்
“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாக மணிந்தார்க்கு நிகழ் குறியாம் லிங்கம்”     எனக் கூறியுள்ளார்.
சிவலிங்கம் அ+உ=ய, 8+2=10 அ-இறைவன், உ- சக்தி.                                                 சிவலிங்கம் சிவபஞ்சாட்சரச் சுடர் அருவ உருவமான நிலையில் யோகத்தின்
சின்னமாக இருப்பதாகக் கூறுவர்                                                                                               சிவலிங்கம் மேல்ப்பகுதி ஆகாயம், கீழ்ப்பகுதியான (ஆவுடையார் ) பூமி எனவும் கூடக் கொள்ளப்படுகிறது. இதை திருமந்திரம் பாடல் எண் 1725 இல்
“தரைஉற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்
திரைபொரு நீர்அது மஞ்சன சாலை
வரைதவழ் மஞ்சுநீர் வான்உடு மாலை
கரைஅற்ற நந்தி கலையும் திக்காமே.”  எனக் கூறப்பட்டுள்ளது.
சிவலிங்கம் சிற்ப சாஸ்த்திர முறைப்படி 1.மேல்ப்பகுதி சிவன் பாகம் (நெருப்பு), சிவலிங்கம் ,சிவஜோதி 2.நடுப்பகுதி (ஆவுடையார்) விஷ்ணு பாகம்  விஷ்ணுலிங்கம் (நீர்), அருட்சோதி 3.அடிப்பகுதி பிரம்மபாகம் பிரம்மலிங்கம் ஆத்மஜோதி (நிலம்) எனவும் கூறப்பட்டுள்ளது.
சிவலிங்கம் மேல்ப்பகுதியாகிய லிங்கம் ஆண்தெய்வமாகவும் கீழ்ப்பகுதியான பீடம் (ஆவுடையார் ) சக்தி வடிவாகிய பெண் தெய்வமாகவும் கூடக் கொள்ளப்படுகிறது.
இதை திருமந்திரம் பாடல் எண் 1770 இல்
“எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்
முந்த உரைத்து முறைசொல்லின் ஞானமாம்
சந்தித்து இருந்த இடம்பெரும் கண்ணியை
உந்தியின் மேல்வைத்து உகந்து இருந்தானே.”  எனக் கூறப்பட்டுள்ளது.
படிகலிங்கம், மரகதலிங்கம் என்பன மிகவும் சத்தியுள்ளவை எனக் கூறப்படுகிறது.
மேலும் பரார்த்தலிங்கம், சுயம்புலிங்கம், கணலிங்கம், தெய்வீகலிங்கம், ஆரிடலிங்கம், மானுடலிங்கம், சணிகலிங்கம், சகஸ்ரலிங்கம் ஆயிரம் முகம் கொண்ட பாணலிங்கம் முதல் ஐந்து முகம் கொண்ட பாணலிங்கம், வரை உள்ளது.
குற்றமற்ற முத்து, பவளம், வைடூரியம், படிகம், மரகதம், நீலம், மாணிக்கம், வைரம், கோமேதகம் ஆகிய இரத்தினங்களாலும் சிவலிங்கத்தை உருவாக்கலாம் எனச் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஐம்பெரும் லிங்கங்கள் 1.காஞ்சிபுரம் - நிலம், 2.திருவானைக்கா - நீர், 3.காளகஸ்த்தி - காற்று, 4.சிதம்பரம் - ஆகாயம், 5.திருவண்ணாமலை - நெருப்பு
இந்தியா முழுவதும் 12 ஜோதிர்லிங்கங்களும் பரந்து உள்ளன.                தொடரும்...   

___________________________________________________________________________

சைவ சித்தாந்தம் ( பகுதி – 7 )
(நாகேந்திரம் கருணாநிதி)

6. இக்கட்டுரையில் வரும் விடையங்களுக்காக ஆதாரமாக எடுக்கப்பட்ட  நூல்களினதும், அவற்றை ஆக்கியோரினதும் விபரங்கள்.
பின் வரும் 14 சைவ சித்தாந்த சாத்திரங்கள் அல்லது மெய்கண்ட சாத்திரங்களான
1. திருவுந்தியார். (கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் அவர்களால் அருளப்பட்ட முதலாவது சைவ சித்தாந்த சாத்திர நூல்)
2. திருக்கழிற்றுப்படியார். (கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் அவர்களால் அருளப்பட்ட இரண்டாவது சைவ சித்தாந்த சாத்திர நூல். இன் நூலின் அரங்கேற்றத்தின் போது நூலைத் தில்லை நடராசப்பெருமானின் பொன்னம்பலத்தின் முன்னிருக்கும் பஞ்சாச்சரப் படிக்கட்டில் வைத்தனர். அப்போது அருகில் இருந்த கல்லால் வடிக்கப்பெற்ற யானை நூலேடுகளை எடுத்து நடராசப்பெருமானின் திருவடிகளில் வைத்தது)
3. சிவஞான போதம். (கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கயிலாய பரம்பரையில் வந்த புறச்சந்தான குரவர் நால்வரில் ஒருவரான பெண்ணாகடம் மெய்கண்ட தேவநாயனார் அவர்களால் அருளப்பட்டது. இன் நூல் சைவ சித்தாந்த சாத்திரங்களில் மணி முடியாய் அதாவது முதல் நிலையில் விளங்கும் நூலாகும்)    இன் நூல் தட்சணாமூர்த்தியின் திருக்கரத்தில் இருக்கும் பாக்கியம் பெற்ற நூலாகும்.
பின் வரும் இரண்டு நூல்களும்  கி.பி.14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கயிலாய பரம்பரையில் வந்த புறச்சந்தான குரவரில் ஒருவரும், சகலாகம பண்டிதரும், மெய்கண்ட தேவநாயனாரின்  மாணவருமான திருத்துறையூர் அருணந்தி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்டது.
4. சிவஞான சித்தியார். (சிவஞான போதத்திற்கு வழி நூல்)
5. இருபா இருபது.
6. உண்மை விளக்கம். (கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்ட தேவநாயனாரின் மாணவரான திருவதிகை மனவாசகம் கடந்தார் அவர்களால் அருளப்பட்டது)
பின் வரும் 8 நூல்களும் கி.பி.14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தில்லை வாழ் அந்தணர்களின் பரம்பரையில் வந்தவரும், புறச்சந்தான குரவரில் ஒருவரும், சித்தாந்த சாத்திரங்கள் 14 இல் சித்தாந்த அட்டகம் என்று போற்றப்படும்  8 நூல்களை அருளியவரும், புறச்சந்தான குரவரில் ஒருவரான மறை ஞான சம்பந்தரின் மாணவருமான கொற்றவன் குடி உமாபதி தேவ நாயனார் (உமாபதி சிவாச்சாரியார்) அவர்களால் அருளப்பட்டது.
7. சிவப்பிரகாசம். (சிவஞான போதத்திற்குச் சார்பு நூல்)
8. திருவருட் பயன்.
9. வினா வெண்பா.
10. போற்றிப் பஃறொடை.
11. கொடிக்கவி. (ஒரு முறை தில்லை நடராசப்பெருமானின் உற்சவத்தின் போது கொடி ஏற மறுத்தது. அப்பொழுது உமாபதி சிவாச்சாரியாரை அழைத்துக் கொடியேற்றுமாறு இறை அசரீரி கேட்டது. தில்லைவாழ் அந்தணர்களால் ஆலயத்திற்குள்ச் செல்லத் தடுக்கப்பட்டிருந்த சிவாச்சாரியாரை அவர்கள் அழைத்து வந்து, அவர் இப்பாடலைப் பாடிய பின்பு கொடி தானாக ஏறியது.)
12. நெஞ்சுவிடு தூது.
13. உண்மை நெறி விளக்கம்.
14. சங்கற்ப நிராகரணம்.  இவற்றுடன்
15. திருமந்திரம்.(10 ஆம் திருமுறை) இன் நூல் 63 நாயன்மார்களில் ஒருவரும், கி.பி.4 ஆம், 5 ஆம் நூற்றாண்டில் 3000 வருடங்கள் வாழ்ந்ததாகக் கருதப்படுபவரும், சுந்தரமூர்த்தி நாயனாரால் “நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்“ எனத் திருத்தொண்டர் தொகையில் பாடப்பட்டவருமான திருமூலர் நாயனார் அவர்களால் அருளப்பட்டது.   கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் பெருமானால் அருளப்பட்ட 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் திருத்தொண்டர் புராணத்தில் இவரை கயிலாயத்துச் சித்தர் என “கயிலாயத்து ஒரு சித்தர் பொதியில் சேர்வார் காவிரி சூழ் சாத்தனூர் கருதும் மூலன்” என்னும் பாடல் மூலம் கூறப்பட்டுள்ளது. சைவம், தமிழ் ஆகிய பெரும் துறைகளில் தலைசிறந்த மும்மணிகள் எனக் கூறப்படும் நூல்கள் திருக்குறள், திருவாசகம் ஆகியவற்றுடன் திருமந்திரமும் சேர்க்கப்பட்டுள்ளது. சைவசமய நூல்களில் மந்திரம் எனக் கூறப்படும் ஒரே நூல் திருமந்திரமாகும். இந்நூல் சைவசித்தாந்த சாத்திரமாகவும், இறைவன் திருவருளைப் போற்றிப் பரவும் தோத்திரமாகவும், தமிழ் மூவாயிரம் எனவும், திருமந்திர மாலை எனவும் போற்றப்படுகிறது. (திரு ஞா.மாணிக்கவாசகன் விளக்க உரை எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது)
16. பன்னிரு திருமுறைகள். இவை 27 இறை அருள் பெற்ற அருளாளர்களால் அருளப்பட்டவை. நான்கு சமயகுரவர்களான கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் (1, 2, 3 ஆம் திருமுறை), அதே காலத்தில் வாழ்ந்த திருநாவுக்கரச நாயனார் அருளிய தேவாரம் (4, 5, 6 ஆம் திருமுறை), கி.பி.
8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய தேவாரம் (7 ஆம் திருமுறை), கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகம், திருக்கோவையார் (8 ஆம் திருமுறை), இவ் இரு நூல்களும்  மாணிக்கவாசகப் பெருமான் சொல்லச் சிவபெருமானால் எழுதப்பட்டது. இவற்றுடன் சேந்தனார், திருமாளிகைத் தேவர், கருவூர்த் தேவர், பூந்துருத்தி நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகிய 9 பேரால் அருளப்பட்ட திருப்பல்லாண்டு, திருவிசைப்பா (9 ஆம் திருமுறை), திருமுறைப் பிரபந்தம் என அழைக்கப்படும் 40 நூல்கள் (11 ஆம் திருமுறை), சேக்கிழார் பெருமானால் அருளப்பட்ட, 5 ஆவது வேதம் என போற்றப்படும்,  பெரிய புராணம் என அழைக்கப்படும் திருத்தொண்டர் புராணம் (12 ஆம் திருமுறை),
17. கந்தபுராணம். கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார்  அவர்களால் அருளப்பட்டது.
18. தொல்காப்பியம். கி.மு. 1 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தொல்காப்பியரால்  அருளப்பட்டது.
19 திருவிளையாடற் புராணம். பரஞ்சோதி முனிவரால் அருளப்பட்டது.
20. திருக்குறள். இன்நூல் உலகப்பொதுமறை, உத்தரவேதம், தெய்வநூல் எனவும் அழைக்கப்படுகிறது. கி. மு. 1 ஆம், அல்லது 3 ஆம் நூற்றாண்டில் திருவள்ளுவ நாயனார் என ஜி.யு.போப்பால் போற்றப்பட்ட திருவள்ளுவரால் அருளப்பட்டது. 1839 இல் ஜி.யு.போப் லண்டனில் இருந்து கத்தோலிக்கத் திருச்சபை மூலம் கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ஆங்கிலேயப் பாதிரியார். இவர் சைவசமயத்தின்பால் ஈர்க்கப்பட்டு திருவாசகம், திருக்குறள், நாலடியார் போன்ற பல நூல்களை மொழிபெயர்த்தவர். உலகத்தில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் திருக்குறளாகும்.
இவற்றுடன் சில சமய, வரலாற்று நூல்கள், அறிஞர்கள், சமயப்பெரியோர்களின் சொற்பொழிவுகளும் அடங்கும்.
குறிப்பு
சைவ சித்தாந்தம் - பகுதி 2 இல் நான் கூறிய அந்தந்த நாட்டு நேரப்படி கணித்த கலண்டரைப் பாவிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என நினைக்கின்றேன். எந்த முறைப்படி ( வாக்கியம், அல்லது திருக்கணிதம்)  கணித்த கலண்டரைப் பாவிக்க வேண்டும் என்பதை  “அந்தந்த நாடுகளில் கிரகணம் நடக்கும் (விரைவில் லண்டனில் சூரியகிரகணம் நடைபெறவுள்ளது) போது அந்த நேரத்தை எந்தப் பஞ்சாங்கம் (கலண்டர்) சரியாகக் கணித்துள்ளதோ அந்தக் கலண்டரை நாம் சரியானதெனக் கொள்ளலாம்” என்ற திரு சிவசண்முகநாதக் குருக்களின் ஆலோசனையைப் பின்பற்றலாம் என நினைக்கின்றேன்.

___________________________________________________________________________

சைவ சித்தாந்தம் ( பகுதி 6 )
(நாகேந்திரம் கருணாநிதி)
ஆலய வழிபாடு


“ கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் “
“ ஆலயம் தொழுவது சாலவும் நன்று ”
கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, முருகப்பெருமானை நேரில் தரிசித்த, கலைவாணிக்கு நிகரானவர் எனப் போற்றப்படும் மூதாட்டி ஔவையார் மேற்கண்டவாறு  கூறியுள்ளார்.
ஆலயம் என்பது ஆன்மா இறைவனில் லயிக்கின்ற இடம். ஆன்மாவின் ஆணவ மலம் அடங்குவதற்குரிய இடம் எனவும் கூறலாம்.
கோயில் என்பதன் பொருள் (கோ – அரசன், இல் – வீடு) அரசனுடைய வீடு என்பதாகும். தெய்வங்களுக்கு அரசனாக விளங்கும் சிவபெருமானின் ஆலயமே திருக்கோயில். நாளடைவில் பிள்ளையார், முருகன், அம்பிகை என மற்றத் தெய்வங்களின் அமைவிடமும் கோயில் என அழைக்கப்படலாயிற்று.
நாம் ஏன் கோயிலுக்குச் செல்லவேண்டும்? வீட்டில் கும்பிடமுடியாதா ?
நாம் முற்பிறவிகளில்ச் செய்த வினையின் ஒருபகுதியை அனுபவிப்பதற்கே இறைவன் திருவருளால் இப்பிறவியை எடுத்துள்ளோம். இவ்வினையை இலகுவாகக் கடந்து செல்வதற்கு நாம் இறைவனை நாடவேண்டும். ஆற்றைக் கடக்க ஓடத்தைப் பாவிப்பது போலவும், தண்ணீர்க் குடத்தைத் தலையில்ச் சுமக்கும் போது தலைக்கும் குடத்திற்கும் இடையில் சும்மாடு (துணியால் வட்டமாகச் சுற்றப்பட்ட திருகணி) வைத்துப் பாரத்தைச் சுலபமாக்குவது போலவும் இறைவன் அருளினால் எமது வினைகளை நாம் இலகுவாகக் கடந்து செல்லலாம். அது மட்டுமல்ல இப்பிறவியில் மேலும் தீய வினைகளைச் செய்யாமல் நல் வினைகளைச் செய்வதற்கு எம்மை நாமே பக்குவப்படுத்துவதற்கு இறைஅருளை வேண்டுவதற்கும் நாம்  இறைவனை நாடவேண்டும். சுருக்கமாக நாம் இறைவனை நாடுவது எமது தேவைகளை வரமாகக் கேட்டுப்பெறுவதற்கும், எமக்கு ஏற்படும் பயத்தை களைய இறைவனிடம் வேண்டுவதற்குமாகும்.
வீட்டில் பூஜை அறை அமைத்து நாம் செய்யும் பூஜை ஆத்மார்த்தப் பூஜை ஆகும் ஆலயத்தில் பொதுவாக (எங்களுக்காக) சிவாச்சாரியார் செய்யும் பூஜை பரார்த்த பூஜை (பர – மற்றவர், அர்த்த – பொருட்டு) ஆகும். மூங்கில்க் காட்டில் உள்ள மூங்கில் முழுவதிலும் தீயை உருவாக்கும் தன்மை இருப்பினும் உராயும் இடத்தில் மட்டும் தீ உருவாகுவதைப்போல இறைவன் எங்கும் நிறைந்திருப்பவராயினும் இறை அருள் வெளிப்படும் இடம் ஆலயம் ஆகும். ஆகம முறைப்படி அமையும் ஆலய அமைப்பும், ஆலயம் அமைக்கும் போது அங்கு பிரதிஸ்டை செய்யப்படும் விக்கிரகங்களும், அவற்றின் கீழ் வைக்கப்படும் இயந்திரமும், அப்பொழுது செய்யப்படும் கிரியைகளும் (கும்பாபிஷேகம்) எங்கும் பரந்துள்ள இறைசக்தியை அங்கு குவியச் செய்கின்றன. அதுமட்டுமல்ல ஆலயத்தில்த் தினமும் நடக்கும் மந்திர உச்சாடனத்தாலும், அபிசேக ஆராதனைகளாலும், அருச்சனை முதலிய கிரியைகளாலும், திருமுறைப் பாடல்களாலும், மகோற்சவம், விசேடகால உற்சவங்களாலும் அன்னதானம் போன்ற நற்காரியங்கள் நடப்பதாலும் இறைஅருள் தொடர்ந்து சுரக்கும் இடமாக ஆலயம் திகழ்கின்றது. ஆலயங்கள் இறைவழிபாடு மட்டுமின்றி எமது மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்கும் இடமாகவும் மிளிர்கின்றன. ஆலயத்திலுள்ள விக்கிரகங்கள் எப்பொழுதும் எமது தேவையைப் பூர்த்தி செய்யத் தயாராக இருப்பதைக் குறிக்க வரதகரத்துடனும், பயத்தை நீக்க அபயகரத்துடனும் தரிசனம் தருகின்றன.
ஆலயத்தில் ஒலிக்கின்ற மந்திர ஒலிகளும், திருமுறைப்பாடல்களும், மணிஓசை, நாதஸ்வரம், மேளம் முதலிய மங்கல வாத்தியங்களின் ஒலிகளும், சாம்பிராணி வாசனை என்பனவும் எமக்குப் பக்தி உணர்வினை எழுப்புகின்றன. இச்சூழ்நிலை எமது ஐம்புலன்களை அடக்கி மனதை ஒருநிலைப்படுத்தி இறைவழிபாட்டிற்கு உகந்ததாக உள்ளது. முறையான ஆலய தரிசனம் , தொழுகை தெளிவான ஞானத்தை நிச்சயம் ஊட்டும்.
உருவ வழிபாடு ஏன் ? , பல விக்கிரக வழிபாடு ஏன் ?
வழிபாட்டில் இரண்டு விதம் உண்டு. ஒன்று அருவ வழிபாடு மற்றது உருவ வழிபாடு. உருவ வழிபாடே பெரும்பான்மையான எளிய மக்களுக்கு ஏற்ற முறை. ஏனெனில் உருவங்களைப் பார்த்தே பழகிப்போன நாம் உருவமில்லாமல் ஒன்றைச் சிந்தித்தல் சற்று கடினமானதாகும். முற்காலத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த நாம் தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை எனப் பல உறவினர்களுடன் உறவாடி, எங்களுக்குப் பிடித்தவர்களிடம் தேவையானவற்றைப் பெற்று வாழப் பழகியுள்ளோம். இறைவனிடமும் இதே வழியைப் பின் பற்றிப் பிடித்த தெய்வங்களை வணங்கி எமக்குத் தேவையானவற்றைப் பெறுவது சுலபமான காரியமாகும்.
ஆலயத்துக்குச் செல்வது எப்படி ?
நாம் ஆலயத்திற்குச் செல்லும் போது அகத்தூய்மையுடனும், புறத்தூய்மையுடனும் செல்லவேண்டும். அகத்தூய்மைக்கு வாய்மையே வழி. இறையாற்றலின்பால் எமக்கு உள்ள நம்பிக்கையும், அறம் தவறின் தெய்வம் எமது வேண்டுதலை நிறைவேற்றாது என்ற அற உணர்வோடும் நாம் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். புறத்தூய்மையானது வெளிச் சுத்தம் அதாவது குளித்து, தோய்த்து உலர்ந்த ஆடையை உடுத்தி வீட்டிலிருந்து இடையில் எங்கும் செல்லாமல் நேராக ஆலயத்திற்குச் செல்லவேண்டும். இறைவன் இருக்கும் அதி உன்னதமான இடமாகிய ஆலயத்தையும் நாம் சுத்தமாகப் பேணவேண்டும்.
ஆலயத்தினுள் செய்யக்கூடாதவை எவை ?
1.கோயிலில் மூலவருக்கு நேர் எதிராக நின்று கும்பிடக்கூடாது. கருவறையில் சுவாமியின் இருபுறமும் நின்றுதான் வணங்கவேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. சுவாமிக்கு எதிரே நிற்பவர் எதிரி எனக் காஞ்சிப்பெரியவர் கூறியுள்ளார். அன்னையின் கடைக்கண் பார்வை பட்டால் செல்வம், கல்வி, ஒருநாளும் தளர்வறியா மனம், தெய்வ வடிவம், வஞ்சமில்லா நண்பர்கள், நல்லன எல்லாம்  கிடைக்கும் என அபிராமிப்பட்டர் கூறியுள்ளார். (மூலவருக்கு முன்பு நிற்கும்போது மற்ற அடியார்கள் மூலவரைத்தரிசிக்கவிடாமல்த் தடுக்கும் பாவத்தை நாம் செய்கின்றோம்)
2.கோயிலுக்குள் இறைநாமத்தைத் தவிர பிற வார்த்தைகள் பேசக்கூடாது. (வேண்டத்தகாத வார்த்தைகளை நாம் பேசும் போது மற்ற அடியவர்களின் அமைதியான பிரார்த்தனைக்கு நாம் இடையூறாக இருக்கின்றோம்)
3. கோயிலுக்குள் கவர்ச்சியான ஆடை அணிகலன்களை அணியக்கூடாது. (எமது கவரச்சி மற்ற அடியவர்களின் புலனடக்கத்தைப் பாதிக்கும்)
4. கோயிலுக்குள் பெண்கள் தலைவிரி கோலமாகச் செல்லக்கூடாது. (விரித்த கூந்தலை துக்கநிகழ்ச்சியாகவும், அபசகுனமாகவும் பார்ப்பது எமது மரபு. கோயிலுக்குள் இது மற்ற அடியவர்க்கு இடையூறாக இருப்பதுமட்டுமல்ல அங்கு ஏற்றப்பட்டிருக்கும் தீபங்களிலிருந்து கூந்தலில்த் தீ பிடிக்கும் அபாயமும் உள்ளது.)
5. ஆலயத்தில் வழங்கப்படும் பிரசாதத்தை வீணாக்காமல் அளவோடு எடுத்து நிலத்தில்ச் சிந்தாமல் உண்ண வேண்டும். (நிலத்தில்ச் சிந்தும் பிரசாதத்தால் மற்ற அடியவர்களின் பாதங்கள் மட்டுமல்ல ஆலய துப்பரவும் பாதிக்கப்படுகிறது. பிரசாத்த்தை வீணாக்குவதால் மற்றடியார்களுக்கு பிரசாதம் இல்லாமல்ப்போகிறது.

___________________________________________________________________________

சைவ சித்தாந்தம் ( பகுதி –5 )
(நாகேந்திரம் கருணாநிதி)


4. சைவ சித்தாந்தம் வேதாந்தத்திற்கு முரண்பாடானதா ?
சித்தாந்தமும் வேதாந்தமும் சைவசமயத்தின் இரு கண்களைப்போன்றவை. வேதாந்தம் என்பது 4 வேதங்களின் ( 108 உபநிடதங்கள் உட்பட ) முடிந்த முடிவு. சித்தாந்தம் என்பது 28 ஆகமங்களின் ( 207 உப ஆகமங்கள் உட்பட )  முடிந்த முடிவு. சைவ சித்தாந்தத்தை ஆகமாந்தம் எனவும் கூறுவர். இரண்டும் ஆன்மா இறைவனை நாடும், போயடையும் வழி முறைகளைக் கூறுகின்றன.
சிவப்பிரகாசம் 7 ஆவது பாடல்
“புறச்சமயத் தவர்க்குஇருளாய் அகச்சமயத்து ஒளியாய்ப்
புகலளவைக்கு அளவாகிப் பொற்பணிபோல் அபேதப்
பிறப்பிலதாய் இருள்வெளிபோல் பேதமுஞ்சொற் பொருள்போல்
பேதாபே தமும்இன்றிப் பெருநூல் சொன்ன
அறத்திறனால் விளைவதாய் உடல்உயிர்கண் அருக்கன்
அறவொளிபோல் பிறிவருமத் துவித மாகுஞ்
சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ
சித்தாந்த் திறனிங்கு தெரிக்கல் உற்றாம்”
அதாவது வேதாந்தத்தின் தெளிவு சைவசித்தாந்தம் எனக் கூறுகிறது.
திருமந்திரம் 2397 ஆம் பாடல்
வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளன
நாதன்உரை அவைநாடில் இரண்டு அந்தம்
பேதம்அது என்பர் பெரியோர்க்கு அபேதமே”
வேதங்கள், ஆகமங்கள் எல்லாம் இறையருள் கூறும், இறைவனால் அருளிச்செய்யப்பட்ட உண்மைப்பொருளுணர்த்தும் உயர்ந்த நூல்களாகும். ஓதப்படும் வேதம் பொதுவானது என்றும், ஆகமம் சிறப்புடையது எனவும், இறைவன் அருளிய இரண்டுமே ஒண்றுதான் எனவும் கூறுகிறது.
திருமந்திரம் 57 ஆம் பாடல்
“அஞ்சன மேனி அரிவைஓர் பாகத்தன்
அஞ்சோடு இருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே”
28 ஆகமங்களையும் 66 முனிவர்களுக்கு சிவபெருமான் தனது 5 ஆவது ( ஈசான ) முகத்தால் அருளிச்செய்தார் எனக் கூறுகிறது.
திருமந்திரம் 54 ஆம் பாடல்
“திருநெறி ஆவது சித்து அசித்தன்றிப்
பெருநெறி ஆய பிரானை நினைந்து
குருநெறி ஆம் சிவமாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.”
அதாவது சித்தாந்தம், வேதாந்தம், சன்மார்க்கம், பூசை வழிபாடு என்கின்ற எல்லா வழிகளுமே இறைஅருள் பெற உதவும் திருநெறிகளே எனக் கூறுகிறது.
கி.பி. 17 ஆம்  நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக் கோவை என்னும் நூலில் பாடல் எண் 11 இல் வேதாந்தம் பழம் எனவும் சைவ சித்தாந்தம் அதன் சாறு எனவும் கூறப்பட்டுள்ளது.
தாயுமானவர் வேதாந்தத்தையும், சித்தாந்தத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தான்  உண்மையான சித்தர்கள் எனக் கூறியுள்ளார்.
பாம்பன் சுவாமிகள், சிவஞான சுவாமிகள், காசிவாசி செந்தி நாத ஐயர் உட்படப் பலர் மேற்படி கருத்தையே கூறியுள்ளனர்.
மாணிக்கவாசகப்பெருமான் திருவாசகத்தில்
“ஆகமம் ஆகி நின்றண்ணிப்பான் தாழ் வாழ்க”
எனக்கூறியுள்ளார்
முழுமுதற்கடவுளாகிய சிவபெருமானால் காலத்திற்குக் காலம் தவமுனிவர்களுக்கு உபதேசிக்கப்பட்ட வேதங்களும் ஆகமங்களும் எவ்வாறு முரண்பட முடியும் என்பது சிந்திக்கத்தக்கது.
சித்தாந்தத்திற்கும்  வேதாந்தத்திற்கும் இடையில் உள்ள சில வேறுபாடுகளைக் கூறுவதாயின் வேதாந்தம் நான் (ஆன்மா) இறைவனாக இருக்கின்றேன். ( சாம வேத மகா வாக்கியமான தத்துவம் அஸி -  தன்நிலைக் கூற்று) ஆனால்ச் சித்தாந்தம் இறைவன் ஆன்மாவாக இருக்கிறார் (பிறநிலைக்கூற்று). வேதாந்தம் இறைவனிடமிருந்து ஆன்மா தோன்றியதாகக் கூறுகிறது. ஆனால்ச் சித்தாந்தம் ஆன்மா என்றும் உள்ள பொருள் அது தோன்றுவதுமில்லை அழிவதுமில்லை எனக் கூறுகிறது. வேதாந்தம் ஆன்மா எல்லா வினைகளையும் அனுபவித்து முடித்த பின் உடலை விட்டு நீங்கி இறைவனுடன் சேருவதாகக் கூறுகிறது. ஆனால்ச் சித்தாந்தம் ஆன்மா எல்லா வினைகளையும் அனுபவித்து முடித்த பின் உடலை விட்டு நீங்கி இறைவனுடைய காலடியில் அமர்கிறது எனக் கூறுகிறது.
கி. மு. 6, 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும், மஹாபாரதம் என்னும் இதிகாசத்தையும், ஸ்ரீமத் பாகவத புராணத்தையும் இயற்றியவரும், 4 வேதங்களையும், 18 புராணங்களையும் தொகுத்தவருமான வேதவியாசமுனிவரால் ஆக்கப்பட்ட வேதாந்தத்தில் உள்ள பிரம்மசூத்திரம் உட்படச் சில பகுதிகளை மட்டும் சைவ சித்தாந்தம் ஏற்றுக்கொள்ளவில்லை. வியாசமுனிவர் பொய் கூறியதால் அதிகார நந்தியால் தண்டிக்கப்பட்டார் என புராணத்தில்க் கூறப்பட்டுள்ளது. இதற்குச் சான்று கூறுவது போல எந்தவொரு சைவ ஆலயத்திலும் வியாசமுனிவரின் சிலை அல்லது விக்கிரகம் இல்லாதிருப்பதை நாம் இன்றும் பார்க்கலாம்.

___________________________________________________________________________

சைவ சித்தாந்தம் – ( பகுதி – 4 )
(நாகேந்திரம் கருணாநிதி)

3.  புராணக்கதைகள் உண்மையானவையா ?
புராணக்கதைகள் வேதத்தில் கூறப்பட்ட தத்துவங்களை, நீதி முறைகளை விரிவாக மக்கள் புரிந்து கொள்வதற்காகக் கூறப்பட்ட உண்மைக் கதைகளாகும். வேதமந்திரமான “ஸத்யம் வத” (உண்மை பேசு) ஹரிச்சந்திர புராணமாகவும், “தர்மம் சர” (அறத்தைப் பின்பற்று) மஹாபாரதமாகவும், “மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ” (தாய், தந்தையருக்குக் கீழ்ப்படிதல்) இராமாயணமாகவும் பெரிதாக விரிவுபடுத்திக் கூறப்பட்டுள்ளது,
புராணங்கள் 18 (வாயு புராணத்துடன் 19 எனவும் கொள்ளப்படுகின்றது) பெரிய புராணங்களும், 18 உப (சிறிய) புராணங்களும் ஆக வியாச முனிவரால்த் தொகுக்கப்பட்டன. பெரியபுராணம் தவிர்ந்த மற்ற எல்லாப் புராணங்களும் சமஸ்க்கிருத மொழியில்த்தான் இருந்தன. பிற்காலத்தில்த் தமிழில் ஸ்காந்தம் என்னும் புராணம் கச்சியப்பசிவாச்சாரியாரால் கந்தபுராணமாகவும், ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் உப புராணம் திருவிளையாடற் புராணமாகவும் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு மேலும் பல புராணங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. பெரியபுராணம் மட்டும் தமிழிலிருந்து சமஸ்க்கிருதத்திற்கு “உபமன்யு பக்த விலாசம்” என மொழிபெயர்க்கப்பட்டது.
புராணங்கள் பிரம்மாவிடமிருந்து வெளிப்பட்டதாக சாந்தோக்கிய உபநிடதத்திலும், மத்ஸ்ய புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. புராணங்கள் சிவனிடமிருந்து வந்ததாகவே சைவசமயம் கூறுகிறது. சைவ சித்தாந்தம் பிரம்மாவை சிவனின் ஒரு அங்கமாகப் பார்ப்பதால் இதில் முரண்பாடு உள்ளதாக நாம் எடுக்கமுடியாது.
திருஞானசம்பந்தப்பெருமான் புராணங்கள் சிவனிடமிருந்து வந்ததைத் பின்வரும் பாடலில் 4 வேதங்களும், 18 புராணங்களும், 6 வேதாங்கங்களும் இறைவனால் விரித்து உரைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்
“பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்தேத்தவே
வேத நான்கும் பதினெட்டோடு ஆறும் விரித்தார்க்கு இடம்
தாதுவிண்டம் மதுவண்டு மிண்டிவரு வண்டினம்
கீதம்பாடம் மடமந்தி கேட்டுகளும் கேதாரமே” 
மேலும்
“பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே”
எனப் புராணங்கள் சிவனிலிருந்து நந்தி, சனற்குமாரர், சூத முனிவருக்கூடாக வந்து வியாச முனிவரால் வகுக்கப்பட்டதைக் கூறியுள்ளார் மேலும்
“மூவார் புரங்கள்எரித்த அன்று
மூவர்க் கருள் செய்தார்”
எனத் திரிபுரங்களை எரித்த பொழுது மூவரை மட்டும் சிவன் காப்பாற்றினான் என்று கூறியுள்ளார்.
சுந்தரமூர்த்தி நாயனார் பின்வரும் பாடலில் சிவன் தான் காப்பாற்றிய மூவருள் இருவரை வாயில்க் காவலர்களாகவும், ஒருவரைத் தான் ஆடும் திருநடனத்திற்கு மத்தளம் முளங்குபவராகவும் நியமித்தார் எனக் கூறியுள்ளார்.
“மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர்நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என் றேவிய பின்னை
ஒருவன் நீகரிகாடரங்காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கவ்வருள் செய்த
தேவதேவநின் திருவடி யடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூருளானே” 
மாணிக்கவாசகப்பெருமான் திருவாசகத்தில் உள்ள திருவுந்தியாரில்
“வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன்வெந்தவா றுந்தீபற”       எனவும்

சேக்கிழார்பெருமான் பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தர் வரலாறு திருப்பாசுர விளக்கத்தில்
“வேத முதல்வன் எனும் மெய்த் திருப்பாட்டினீனேர்
ஆதி உலகோர் இடர்நீங்கிட ஏத்த ஆடும்
பாத முதலாம் பதிணெண் புராணங்கள் என்றே
ஒது என்று உரை செய்தனர் யாவும் ஒதாதுணர்ந்தார்”    எனவும்
அருணந்தி சிவாச்சாரியார் பின்வரும் “சிவஞானசித்தியார்” சுப பக்கம் பாடல் எண் 266 இல் வேதாகமப்பொருள்களை விரிவுபடுத்தி இறைவன் அருளால் அருளாளர்கள் புராணங்களை உருவாக்கினார்கள் எனக் கூறியுள்ளார்
“அருமறை ஆகமம்முதல்நூல் அனைத்தும் உரைக்கையினான்
அளிப்புஅரிதாம் அப்பொருளை அரன்அருளால் அணுக்கள்
தருவர்கள் பின்தனித்தனியே தாம்அறிந்த அளவில்
தர்க்கமொடு உத்தரங்களினால் சமயம் சாதித்து
மிருதி புராணம் கலைகள் மற்றும் எல்லாம்
மெய்நூலின்வழி புடையாம் அங்கம் வேதாங்கம்
சுருதி சிவாகமம் ஒழியச்சொல்லுவது ஒன்றில்லை
சொல்லுவார் தமக்கறையோ சோல்லொ ணாதே”
திருமூலநாயனார் “திருமந்திரம்” இரண்டாம் தந்திரத்தில் 337 ஆம் பாடலிலிருந்து 375 வரையில் இலிங்க புராணம், தக்கன்வேள்வி, அடிமுடி தேடல் போன்ற  பல புராணங்களை எடுத்து அவற்றில் உள்ள  நல்லொழுக்கம், உண்மைப்பொருள் விளக்கம், ஐந்தொழில்களின் செயற்பாடுக்கேற்ப உயிர்களின் செயற்பாடுகள் பற்றி  விளக்கியுள்ளார்.
புராணங்கள் பற்றிச் சமயகுரவர்கள், சந்தானகுரவர்கள், திருமூலநாயனார், சேக்கிழார் பெருமான் உட்பட பல இறை அருள் பெற்ற அருளாளர்களின் கூற்றுக்கு மேலாக நாம் எந்தவித ஐயப்பாடும் கொள்ளத் தேவையில்லை.

___________________________________________________________________________

சைவ சித்தாந்தம் – ( பகுதி – 3 )
(நாகேந்திரம் கருணாநிதி)


2. ஆலயங்களில் பூசை சமஸ்கிருதத்தில் ஏன் நடத்தவேண்டும் தமிழில் நடத்தினால் என்ன ?
மந்திரம் இல்லாத வழிபாடு பலன் தராது என்பது சிவாகமக் கருத்தாகும். வேதமந்திரங்கள் இறைவனால் நாத வடிவில் ரிசிகளுக்கு உபதேசிக்கப்பட்டவையாகும். இதையே நமது முன்னோர் குரு சிஷ்ய முறைப்படி (குருகுல வாசம்) குருவிடமிருந்து வாய்மொழி மூலம் கேட்டு அறிந்து வந்தார்கள். இன்றும் அவை தொடர்கின்றன. மந்திரங்கள் சமஷ்கிருத மொழியில் ரிசிகளால் தொகுக்கப்பட்டுள்ளன. சமஷ்கிருதம் தேவ பாஷை எனக் கூறப்படுகிறது. ஆகமங்களை இறைவன் இறை அருள் பெற்ற அருளாளர்கள் மூலம் தோற்றுவித்தான். ஆலயவழிபாடு வேதங்கள், ஆகமங்கள் ஆகியவற்றை ஆதாரமாகக்கொண்டு  நடைபெறுகின்றது. வேதங்கள், ஆகமங்கள் இரண்டும் சமஷ்கிருத மொழியிலேயே உள்ளன. வேதமந்திரங்களை பீஜம் எனப்படும் ஓசை (அதிர்வு) சரியாக உச்சரிக்கப்படாவிட்டால் அவற்றின் பலனை நாம் பெறமுடியாது. எனவே அவற்றை நாம் தமிழில் மொழிபெயர்த்துப் பாவிக்க முடியாது. தற்கால விஞ்ஞான ஆராச்சிகள் மந்திரங்களின் அதிர்வினால்த் தான் அவை பலனளிக்கின்றன என்பதனை நிரூபிக்கின்றன. எனவே முழுமுதற்கடவுளான சிவபெருமானால் தவமுனிவர்களுக்கு உபதேசிக்கப்பட்ட வேத, ஆகமங்களை நாம் புறம் தள்ளமுடியாது.
இறைவனே அருளாளர்களுக்கு தமிழ்மூலம் தன்னைப் பாடுமாறு கூறியதாக நாயன்மாரின் வரலாற்றிலும், புராணங்களிலும் கூறப்பட்டுள்ளன. சிவபெருமான் வேதத்திற்கு அதிபதியாகிய பிரம்மதேவனைத் திருமூலராக அவதரித்துத் தமிழ் மூலம் தன்னைப் பாடுமாறு பணித்ததாகப் புராணக்கதை கூறுகிறது. சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தில் திருமூலதேவநாயனார் புராணம் 23 ஆவது பாடலில்
“தண்ணிலவார் சடையார்தாம்
தந்த ஆகமப்பொருளை
மண்ணின் மிசைத் திருமூலர்
வாக்கினால் தமிழ் வகுப்பக் . . . . . “ 
அதாவது குளிர்ந்த நிலவணிந்த திருச்சடையை உடைய சிவபெருமான் தாம் அருளிய ஆகமப் பொருளை இந்நிலவுலகில்த் திருமூலர் வாக்கினால் தமிழால் சொல்லுதற்கு ஏற்ப என்பதாகும்.
இதையே திருமூலரும் திருமந்திரம் 81 ஆவது பாடலில்
“பின்னை நின்று என்னே . . . . . . .. . . எனத் தொடங்கி
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே”
இறைவன் என்னைத் தமிழ் ஆகமம் படைக்கப் படைத்துள்ளான் எனக் கூறியுள்ளார்.
சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரிடம் “பித்தா” எனத் தமிழில் அடி எடுத்துக் கொடுத்துத் தன்னைப் பாடுமாறு கூறிய வரலாறும்,
சேக்கிழார்பெருமானுக்கு “உலகெலாம்” என பெரியபுராணத்திற்கு  அடி எடுத்துக் கொடுத்த வரலாறும் உள்ளது.
அருணகிரிநாதர் முத்தமிழால் வைதால்க் கூட முருகன் வாழவைப்பான் எனவும்
குமரகுருபரர் பிள்ளைத்தமிழில்
“பைந்தமிழ் பின் சென்ற பச்சைப்பசும் குன்றலே”
என இறைவன் தமிழுக்குப் பின்னால்ச் சென்றான் எனவும் பாடியுள்ளார்கள். இவ்வாறு பல அருளாளர்களால்த் தமிழில்ப் பாடிய பாடல்கள் 12 திருமுறைகளாகும். இவற்றைப் பொருளறிந்து, பண்ணுடன் பாடி நாம் இறைவனை வழிபடலாம். இதை மாணிக்கவாசகப்பெருமான் சிவபுராணத்தில்
“சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்”    எனவும்,
திருநாவுக்கரசர்
“சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாட மறந்தறியேன்” 
எனவும் பொருளையும், இசையையும் வற்புறுத்தியுள்ளார்கள். இவ்வாறே நாயன்மார்கள் பொருளறிந்து, மனமுருகிப், பண்ணுடன் பாடல்களைப் பாடியே பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்கள். வேதமந்திரங்களுக்கு அதன் உச்சரிப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வாறே திருமுறைப் பாடல்களுக்கும் அவற்றின் உச்சரிப்பும், பண்ணும் முக்கியமாகும்.
இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளான சமஸ்கிருதம், தமிழ் இரண்டும் இரு கண்கள் போன்றவை. இவற்றில் நாம் பேதம் பாராமல் ஆலயப் பொது வளிபாட்டு முறைகள் காலம், காலமாக நடப்பது போல சமஸ்கிருதத்திலும், எமது சொந்த வளிபாடு எமது தாய் மொழியாகிய தமிழிலும் நடத்தலாம், ஆலயங்களில் சமஸ்கிருதம் தெரியாத அடியார்களின் நன்மை கருதி குருமார் ஆலய கிரியைகள் பற்றிய விளக்கங்களை கிரியை நடப்பதற்கு முன்போ, அல்லது பின்போ கூறலாம். தமிழர்களாகிய நாம் எமது சுயதேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வேறு மொழிகளைப் படிப்பது போல எமது சமய அறிவை வளர்ப்பதற்காக சமஸ்கிருதத்தைப் படிக்கலாம். திருமுறைகளை பொருளறிந்து பண்ணுடன் ஓதுவதற்கு ஒதுவார் மூர்த்திகளின் சேவையை நாம் பெற்றுக்கொள்ளலாம்.

___________________________________________________________________________

சைவ சித்தாந்தம் – ( பகுதி – 2 )
(நாகேந்திரம் கருணாநிதி)


சைவசித்தாந்தத்தை விரிவாகப் பார்ப்பதற்கு முன் சில விடையங்களைப் பற்றிப் பார்க்கலாம் என எண்ணுகின்றேன். முதலாவதாக
1. எமது சமயவிழாக்கள், கொண்டாட்டங்கள் இரு வேறு வேறு  நாட்களில் நடப்பது ஏன் ?
முக்கியமாக எம் முன்னோர்களால் எம்மிடம் தரப்பட்ட  எமது சைவசமயக் கொள்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் வரும்காலத்தில் எவ்வித ஐயப்பாடுமின்றி இன்றைய இளம் சந்ததியினர் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை நாம் ஏற்படுத்திக் கொடுப்பது எமது கடமையாகும். இவ்விடையத்தில் அண்மைக்காலத்தில் எமது சமயவிழாக்கள், கொண்டாட்டங்கள் இரு வேறு வேறு  நாட்களில் நடப்பது எமது கடமையை நாம் சரிவரச் செய்கிறோமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக இம்முறை தைப்பொங்கல் இரண்டு நாட்களில் கொண்டாடப்பட்டதைக் கூறலாம். இதற்கான காரணமும் விளக்கமும் கீழே எழுதியுள்ளேன்.
 

தைப்பொங்கல் 14/01  இலா, 15/01 இலா

1.நாம் காலம் காலமாகப் பாவிப்பது “வாக்கிய பஞ்சாங்கம்” ஆகும்  இது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ரிசிகளால் அருளப்பட்ட சுலோகங்களின் அடிப்படையில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அவர்களின் பழய கணித முறைப்படி கணிக்கப்படுவதாகும். இதையே பெரும்பாலான  தமிழர்கள் இலங்கையிலும், இந்தியாவிலும் பாவிக்கின்றனர்
2.எமது பஞ்சாங்கக் கணிப்புகள் யாவும் சூரியன் உதயமாகும், அஸ்த்தமனமாகும் நேரங்களை அடிப்படையாகக் கொண்டுதான் கணிக்கப்படுகின்றன.
3.சூரிய உதயம், அஸ்த்தமனம் இடத்திற்கிடம் மாறுபடுவதாலும், தற்கால விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக (சந்திரனின் வட்டப்பாதையில் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுத்து) பல வருடங்களுக்கு முன்பு “திருக்கணித பஞ்சாங்கம்” உருவாகியது.
4.இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் பலகாலாக இரண்டு பஞ்சாங்கங்களும் பாவனையில் இருக்கின்றன. இரண்டு கணிப்புகளுக்கும் இடையில் சில வேறுபாடுகள் உள்ளன. இவ்வேறுபாடு பௌர்ணமி, அமாவாசை இல் குறைவாகவும், அஸ்டமி, நவமியில் கூடுதலாகவும் (அதிகபட்சம் 6 மணி 48 நிமிடம்) இருக்கின்றன. ஒரே நாட்டு நேரத்திற்குக் கணிக்கப்பட்டாலும் இவ் வேறுபாடுகள் நிச்சயமாக இருக்கும்.
5.இந்தியாவில் திரு ஜவகர்லால் நேரு பிரதம மந்திரியாக இருந்தகாலத்தில் அவரால் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட பல அறிஞர்கள் கொண்ட குழு “திருக்கணிதம்” தான் தற்காலத்திற்குப் பொருத்தமானது என முடிவு செய்தது. ஆனால்  இலங்கையிலும், இந்தியாவிலும் பலர் இப்பொழுதும் வாக்கிய பஞ்சாங்கத்தையே பாவிக்கின்றனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனிப் பஞ்சாங்கங்கள் உள்ளன.
6.இலண்டனில் சூரியன் உதயமாகும், அஸ்த்தமனமாகும் நேரங்கள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் போன்றதல்ல. அங்கு சூரியஉதயம் சராசரி காலை 6.00 மணி இங்கு காலை 4.45 (கோடைகாலத்தில்) இலிருந்து, 8.00 (குளிர்காலத்தில்) மணிவரைக்கும் நடைபெறும். அதுமட்டுமல்ல சராசரி 4.5 அல்லது 5.5 மணி நேர வித்தியாசமும் உள்ளது. இதனால் இலண்டனில் இலண்டன் நேரத்திற்குக் திருக்கணித முறைப்படி கணிக்கப்பட்ட கலண்டர்தான் சரியானது. இதை இங்குள்ள ஈழத்தமிழர்களால் நடாத்தப்படும் பெரும்பாலான ஆலயங்களும், குருமாரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.  மற்ற வெளிநாடுகளும் இம்முறையைப் பின்பற்றுவதுதான் சரியாகும்.
7.சூரியன் மகரராசிக்குள் (மகரசங்கிராந்தி) பிரவேசிக்கும் நாள் (நேரம்) தைப்பொங்கலாகும். 14 – 01 – 2015 அன்று இலண்டன் நேரத்திற்குப் பி.ப. 01.58 மணிக்கு இந்நிகழ்வு நடைபெற்றது. இது இலங்கை, இந்திய நேரப்படி இரவு 7.28 ஆகும். சூரியஅஸ்த்தமனத்திற்குப் பின்பாகையால்  அங்கு மறுநாள் 15 – 01 – 2015 இல் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டது. உதாரணமாக லண்டனில் காலை 11.00 க்கு இந்நிகழ்வு நடைபெற்றிருந்தால் இலங்கை, இந்தியாவில் மாலை 5.30 மணியாகையால் அங்கும் 14 – 01 – 2015 இல் கொண்டாடப்பட்டிருக்கும். சூரியஅஸ்த்தமனத்திற்குப்பின்பு நடைபெறும் நிகழ்வுகளை மறு நாள் எடுப்பது மரபாகும். 14 ஆம் திகதி இலண்டன் நேரத்திற்குப் பி.ப. 01.58 மணிக்கு சூரியன் மகரராசிக்குள்  பிரவேசிக்கும் போது 15 ஆம் திகதி இலண்டனில் பொங்கல் கொண்டாடுவது தவறாகும்,
8. இலண்டனில் ஈழத்தமிழர்களால் நடாத்தப்படும் பிரித்தானிய சைவத் திருக்கோயில் ஒன்றியம் ஆரம்பித்த முதலாவது கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட முக்கியமான தீர்மானங்களில் ஒன்று “இலண்டனில் இலண்டன் நேரத்திற்குக் கணிக்கப்பட்ட ஒரே கலண்டரை எல்லோரும் பாவிப்பது” என்பதாகும். இவ்வருடம்  பிரித்தானியச் சைவத் திருக்கோயில் ஒன்றியத்தில் அங்கம்வகிக்கும் 9 ஆலயங்களும் , அங்கம்வகிக்காத பெரும்பாலான சைவஆலயங்களும் சேர்ந்து 30 இற்கு மேற்பட்ட ஆலயங்கள் இலண்டன் நேரத்திற்குத் திருக்கணித முறைப்படி கணிக்கப்பட்ட கலண்டரைப் பாவித்தபடியால் 14 – 01 – 2015 இல் தைப்பொங்கலைக் கொண்டாடினார்கள். ஆனால் ஒன்றியத்தில் அங்கம்வகிக்கும்  ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோயில் மட்டும் வாக்கிய முறைப்படி  கணிக்கப்பட்ட கலண்டரைப் பாவிப்பதால் 15 – 01 – 2015 இலும், இந்திய மக்களால் நடாத்தப்படும் ஈஸ்ற் காமில் உள்ள இலண்டன் ஸ்ரீ முருகன் ஆலயமும், இலண்டன் ஸ்ரீ மஹலக்சுமி ஆலயமும் இந்தியக் கலண்டரைப் பாவிப்பதால் 15 – 01 – 2015 இலும் கொண்டாடினார்கள். சில வர்த்தகர்களும் தைப்பொங்கல் 15 - 01 - 2015 என அச்சிட்ட மாதக்கலண்டர்களை இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு வினியோகித்ததாலும், சண் தொலைக்காட்சி போன்ற இந்தியத் தொலைக்காட்சிகள் இந்தியாவில் 15 – 01 – 2015 இல் நடக்க இருக்கும் பொங்கல் நிகழ்ச்சிகள் பற்றி முன்கூட்டியே லண்டனில் தொடர்ந்து அறிவித்துக்கொண்டிருந்ததாலும் மக்களிடையே தடுமாற்றம் ஏற்பட்டது.
9.இங்கு இருக்கும் எல்லாச் சைவ சமயத்தவர்களும் எமது சமய விழாக்கள், கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும் ஒரே நாளில் நடத்தச் சம்பந்தப்பட்ட எல்லோரும் முக்கியமாக ஆலயங்களின் நிர்வாகிகள், குருமார்கள், கலண்டர்களை இறக்குமதி செய்யும், விற்கும் வர்த்தகர்கள் ஆகியோர் முயற்சித்து வரும் காலச் சந்ததியினர்  நம்பிக்கையுடன் எமது சைவசமயக் கொள்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் எவ்வித ஐயப்பாடுமின்றிக்  கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை வகுப்பது  சம்பந்தப்பட்ட எல்லோரினதும் கடமையாகும்.

___________________________________________________________________________

சைவ சித்தாந்தம் – ( பகுதி – 1 )
( நாகேந்திரம் கருணாநிதி )
இறைவணக்கம்

 “ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்றுகின்றேனே”
“திருமந்திரம்” நூலின் காப்புச் செய்யுளாகிய மேல் உள்ள பாடலின் கருத்து ஐந்து திருக்கரங்கள், பிரணவத்தின் வடிவாக யானை முகம், வெண்ணிலாவின் மூன்றாம் பிறைச்சந்திரன் போன்ற ஒற்றைக்கொம்புடையவன், பரம்பொருளின் திருமகன், அறிவின் உச்சியாக இருப்பவனைச் சிந்தையில் வைத்துத் தியானித்து அவன் திருவடி போற்றி வணங்குகிறேன். (திருமந்திரத்தில் சிவனுக்கு நந்தி என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளது )
என்னுள் இருந்து என்னை இயக்கும் பரம்பொருளின் அம்சமான ஞானமுதல்வனாகிய கணபதியை வணங்கிச் சரஸ்வதிதேவியின் அருளையும் வேண்டி இம்முயற்சியை ஆரம்பிக்கின்றேன்

குரு வணக்கம்

“பார்வை என மாக்களைப் பற்றிப் பிடித்தற்காம்
போர்வை எனக் காணார்”
“திருவருட்பயன்” நூலின் 45 ஆவதாக உள்ள மேல் உள்ள பாடலின் கருத்து அவ்வவ் இனத்துப் பழக்கப்பட்ட விலங்குகளின் துணையைக் கொண்டு அவ் இன விலங்குகளைப் பிடிப்பது போலப் பக்குவப்பட்ட ஆன்மாக்களைத் தன்வசப்படுத்துவதற்காக இறைவன் மானுடச் சட்டை தாங்கிக் குருவடிவாக வருவான்.
“குருவே சிவம்எனக் கூறினன் நந்தி . . . . . “ எனத்தொடங்கும்
“திருமந்திரம்” பாடல் எண் 1581 இலும் (சில புத்தகங்களில் பாடல் எண்கள் வேறுபட்டுள்ளன) சிவப்பரம்பொருள்தான் ஞான குருநாதன் எனக் கூறப்பட்டுள்ளது.
எனக்குக் குருவாக வந்த மதிப்பிற்குரிய ஆசான் “செந்நெறிச் செம்மல்” திருவாளர் சூ.யோ.பற்றிமாகரன் BA, Special Diploma(Oxford), BSC, PG Diploma, MA (Politics of Democracy), MA (Tamil) அவர்களின் பாதம் பணிந்து,
லண்டனில் சைவசித்தாந்தப் பயிற்சி மையத்தை ஆரம்பித்து எனக்குச் சந்தர்பத்தைத் தந்த லண்டன் சைவமுன்னேற்றச் சங்கத்திற்கும், இதற்காக அயராது உழைத்த சைவப்பெரியார் திருவாளர் வ.இ.இராமநாதன் அவர்களுக்கும் நன்றி கூறி இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்.

தொடங்குமுன்

“நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”
“திருமந்திரம்” நூலின் 85 ஆவதாக உள்ள மேல் உள்ள பாடலின் கருத்து நான் பெற்றதான இறை அருள் – கருணையால் உணர்ந்தறிந்த, பேரின்ப ஞானப் பேற்றை, இவ்வுலக மக்களெல்லாம் பெற்றுய்ய வேண்டும் என்பதாகும்.
“தொல்காப்பியம்” 3 ஆம் பாகம் பொருளதிகாரம் 4 ஆம் பகுதி  “கற்பியல்” 51 ஆவது பாடல்
“காமம் சான்ற . . . . . எனத் தொடங்கி . . . . சிறந்தது பயிற்றல் இறந்ததின் பயனே”
என முடியும் பாடல் நாம் கற்ற நல்ல விடையங்களை  மற்றவர்களுக்கும் பயிற்றுவிக்க வேண்டும் எனக் கூறுகிறது. 
இதற்கமய இறைவன் அருளால் கிடைத்த சிறு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கின்றேன்.
ஆன்மா தன்னுள் இருக்கும் சிவத்தை அறிந்து, மல நீக்கம் பெற்றுச் சிவனடியைச் சேரும் வழியைக் காட்டுவதே சைவ சித்தாந்தத் தத்துவத்தின் நோக்கமாகும். சைவ சித்தாந்தத்தை விரிவாகப் பார்க்குமுன் சுருக்கமாக இதன் சாரத்தை முதலில்ப் பார்ப்போம்.
பின் வரும் விடையங்களைச் சைவ சித்தாந்தம் உறுதிபடக் கூறுகிறது.
1. பதி (இறைவன்), பசு (ஆன்மா), பாசம் (ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள்) இவை மூன்றும் அனாதியானவை. அதாவது என்றும் நிரந்தரமானவை. இவை தோண்றுவதுமில்லை அழிவதுமில்லை.
2. பதி (இறைவன்) ஒருவரே. அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். அவர் அருவமும் உருவமும் அல்லாத, குணமும் குறிகளும் இல்லாத, விருப்பு வெறுப்பு இல்லாதவர். அவர் சிவம் என அழைக்கப்படுகிறார். சிவம் ஆன்மாவின் மேல் உள்ள கருணையினால் ஆன்மாவை ஈடேற்றும் பொருட்டுச் சிவன், சக்தி, நாதம், விந்து (அருவத்திருமேனி), சதாசிவம் (இலிங்கத்திருமேனி) (அருவுருவத்திருமேனி), 25 மகேஸ்வர வடிவங்கள் ஆகவும், பிரம்மா, விஸ்ணு, உருத்திரன், சதாசிவன், மகேஸ்வரன் ஆக முறையே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய தொழில்களைச் செய்வதற்கும், அவர்களின் சத்திகளாக இயங்கச் சரஸ்வதி, இலட்சுமி, உமையவள், மனோன்மணி, மகேஸ்வரி ஆகவும், வைரவர் (மகேஸ்வர வடிவங்களில் ஒண்று), வீரபத்திரர், கணபதி, முருகன், ஐயப்பன் போன்ற பல திருமேனிகளைத் தாங்கி நிற்கின்றார்.
3. பசு (ஆன்மா) ஒரு பொழுதும் தனித்து நிற்காமல் ஒன்றைச் சார்ந்து (மலத்தை அல்லது இறைவனை) நிற்கும். தானாக ஒன்றும் அறியாது. அறிவித்தால் அறியும் தன்மையுள்ளது. ஆன்மா தான் சேர்த்து வைத்த வினையின் (சஞ்சிதம்) ஒரு பகுதியை (பிராரப்தம்) இறைவன் ஆணைப்படி இப்பிறவியில் அனுபவிப்பதற்காக இறைவனால்த் தேர்ந்தெடுத்த உடலுக்கு அனுப்பப்படுகிறது. ஆன்மா வினையை அனுபவித்து முடிப்பதுடன், இப்பிறவியில்ச் செய்த வினையின் ஒரு பகுதியை இறைவன் ஆணைப்படி இப்பிறவியில் அனுபவிப்பதுடன் மறு பகுதியை (ஆகாமியம்) சஞ்சித வினையுடன் சேர்ப்பதற்காக எடுத்துக்கொண்டு இவ்வுலக வாழ்வை விட்டு நீங்குகின்றது. இறைவன் ஆன்மாவுடன் சேர்ந்து இருந்தாலும் ஆன்மா ஆணவ மலத்தால்க் கட்டுண்டு இருப்பதால் இதை அறியாது. அத்துடன் இப்பிறவியில் ஆன்மா செய்யும் நல்வினை, தீவினைகளுக்கு இறைவன் பொறுப்பாகமாட்டான். ஆன்மா இப்பிறவி எடுத்த நோக்கமான பிராரர்த்தவினையை அனுபவிக்கும் செயலை இப்பிறவியிலேயே முடிக்கவேண்டும். இதிலிருந்து ஆன்மாவால் விடுபடமுடியாது. ஆனால் ஆன்மா இறைவனை நாடி இவ்வினையைச் சுலபமாகக் கழிக்கமுடியும்.
4. பாசம் (மும்மலங்கள்). 1. ஆணவம். ஆன்மாவிற்கு அறியாமையைச் செய்யும். இது தன்னையும் காட்டாது, பிறபொருளையும் காட்டாது. ஆன்மாவுடன் பிறப்பிற்கு முன்பும், பின்பும் சேர்ந்திருக்கும். 2. கன்மம். இது இரு வகைப்படும். 1. மூலகன்மம் (காரணகன்மம்) (சஞ்சிதவினை) (தொல்வினை) ஆன்மா உடல் எடுக்குமுன் ஆன்மாவுடன் இருப்பது. ஆன்மா உடல் எடுக்கும் போது இறைவனால் இதில் ஒரு பகுதியை ஆன்மாவிற்கு வழங்கும் போது பிராரப்தவினை (ஊழ்வினை) (விதி) எனக்கூறப்படும். 2. காரியகன்மம் (ஆகாமியம்). ஆன்மா இப்பிறவியில்ச் செய்யும் வினை. இது நல்வினை, தீவினை என இருவகைப்படும். 3. மாயை. இது சடப்பொருள் அனைத்தின் ஆற்றல்களும் ஒன்றாகத் திரண்டு நிற்பது. இவ்வுலகம், மற்றும் இங்குள்ள அனைத்துப் பொருட்களும் மாயையாகும். இது சுத்தமாயை, அசுத்தமாயை என இரு வகைப்படும். இறைவன் ஆன்மாவின் மலத்தை நீக்குவதற்காக மாயையை உபயோகிக்கின்றான்.


Share