Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

  

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


பனிக்காலத்தில் பட்டுக்குட்டிகளை பத்திரமா பாத்துக்கங்க!

மழைக்காலம் முடியும் முன்பே பனிக்காலம் தொடங்கிவிட்டது. அதிகாலையில் மூடுபனி சில்லிடச் செய்வதால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சளி, மூக்கில் வடிதல், இருமல் போன்றவை அதிகம் தாக்கும். தவிர தொண்டையில் டான்சில் வீக்கம், இருமல், ஆஸ்துமா போன்ற மூச்சுத்திணறல் நோய்கள் இந்த பனிக்காலத்தில்தான் அதிகரிக்கின்றன. அது மட்டுமல்லாது இன்புளுயன்ஸா காய்ச்சல், நிமோனியா, ஒற்றைத் தலைவலி, மூட்டுவலிகள், நரம்பு நோய்கள், தோல் நோய்கள் ஆகிய பல வியாதிகள் ஒவ்வொன்றாக வரிசை கட்டி நிற்கும்

சிக்குன்குனியா, ஜப்பான் சுரம், மூளைக்காய்ச்சல்,
பன்றிக் காய்ச்சல் போன்றவைகள் மாசு படிந்த காற்றில் உள்ள நோய் கிருமிகளால் இந்த பனிக்காலத்தில் அதிகம் தாக்குகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை இவை தாக்குவதால் அவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே இவற்றில் தப்பிக்க வருமுன் காப்பதே நல்லது.
சத்தான உணவு
 
குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுத்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இதன் மூலம் எந்தவித நோயும் இரண்டு நாட்களுக்கு மேல் தங்காது.
காய்ச்சி ஆறவைத்த தண்ணீரையே குழந்தைகளுக்குக் குடிக்க கொடுக்கவேண்டும். அதிகம் இருமல் இருந்தால் வெதுவெதுப்பான சுடுநீரை குடிக்க கொடுக்கலாம்.
பனிக்காலத்தில் பெரியவர்களுக்கு மட்டுமல்லாது குழந்தைகளுக்கும் உடல் வறட்சி ஏற்படும். எனவே சருமம் வறண்டு போகாமல் இருக்க நிறைய பழங்கள், சத்தான காய்கறிகளை சாப்பிடக் கொடுக்கவேண்டும். இதன் மூலம் உடல் வறட்சி நீங்குவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
காரமான மசால உணவு வேண்டாம்
 
பனிக்காலத்தில் பலருக்கும் ஜீரண சக்தி குறைவாக இருப்பதால் வயிறு உபாதைகளும் ஏற்படும். எனவே அதிக காரமில்லாத மிதமான உணவுகளையே குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டும். அப்பொழுதுதான் உணவு எளிதில் ஜீரணமாகும்.
மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் எதையும் சாப்பிடாதீர்கள். பனிக்காலத்தில் அதிகம் மசால் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். காரம், புளிப்பு இவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். குடிக்க, குளிக்க வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்துங்கள். பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்க்காய்கறிகள் தவிர்த்துவிடுங்கள்.
 
தலை காது வழியே பனி விரைவில் உடலுக்குள் சென்று உபாதை தரும். எனவே வெளியே பனியில் செல்ல நேர்ந்தால் முக்கியமாய் குழந்தைகளுக்கு காதுகளை மூடும் குரங்குக்குல்லா போட வேண்டும். இதன்மூலம் குழந்தைகளுக்கு நோய் ஏற்படாமல் வருமுன் தடுக்கலாம்.
சளி நீக்கும் கற்பூரத்தைலம்
 
சளியினால் அதிகம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தைலம் தடவுவதை விட வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட கற்பூர எண்ணெயினை பூசி விடலாம். இதன் மூலம் சளித் தொந்தரவு நீங்கும். குழந்தையின் சருமமும் பாதிக்கப்படாது.
ஒரு குழிக்கரண்டி அல்லது கிண்ணத்தில் 15 சொட்டு தேங்காய் எண்ணெயை விட்டு சூடாக்கவும். தேங்காய் எண்ணெய் நன்கு சூடானதும் அதனை இறக்கிவிட்டு அதில் ஒரு சிறு கட்டி கற்பூரத்தைப் போடவும். உடனடியாக எண்ணெயில் கற்பூரம் கறைந்திருக்கும்.
 
நமது கைக்கு சூடு பொறுக்கும் அளவிற்கு உள்ள பதத்தில் தொட்டு குழந்தையின் நெஞ்சுப் பகுதி, கழுத்து, முதுகுப் பகுதிகளில் தேய்த்துவிடவும். அந்த சூட்டில் மார்பில் இருக்கும் சளி கரைந்து மூக்கு வழியாகவோ அல்லது மலம் வழியாகவோ வெளியேறிவிடும். குழந்தைக்கு இதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.

நன்றி திரு கருணாநிதி அவர்களுக்கு